குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு வெங்கய்ய நாயுடு வேட்பு மனு தாக்கல்

வரும் 5ஆம் தேதி, குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியை வேட்பாளராக தேர்வு செய்தன.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அமித்ஷா, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு போட்டியிடுவார் என அறிவித்தார். இதையடுத்து, நேற்று இரவே தனது அமைச்சர் பதவியை வெங்கய்ய நாயுடு ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று காலை சுமார் 11.30 மணியளவில் வெங்கய்யா நாயுடு தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் வெங்கய்யா நாயுடுவை புடைசூழ அழைத்து வந்தனர். பின்னர் அவர் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

 

முன்னதாக, பாஜக சார்பில் போட்டியிடும் வெங்கய்ய நாயுடுவை புகழ்ந்து டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, கடின உழைப்பும், கொள்கை பிடிப்பும் கொண்ட வெங்கய்ய நாயுடு, அனைத்து தரப்பினரின் மதிப்பையும் பெற்றவர் என்று தெரிவித்து இருந்தார்.

 

இதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத்யாதவ் ஆகியோருடன் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன