குடிசையில் உறங்கிக்கொண்டிருந்த சிறுவர்களை விஷப்பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குடிசையில் உறங்கிக்கொண்டிருந்த சிறுவர்களை விஷப்பாம்பு கடித்ததில், 8 வயது சிறுவன் உயிரிழந்தார். மற்றொரு சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொன்னங்கோயில் கிராமத்தில் விவசாயி சின்னையனும் அவரது மகன்களான 13 வயது பிரகாஷ்குமார் மற்றும் 8 வயதான நவீன்குமார் மூவரும் நேற்றிரவு தங்களது குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை குடிசைக்கு வெளியே புதருக்குள் இருந்து வந்த விஷப்பாம்பு ஒன்று சிறுவர்கள் இருவரையும் கடித்துள்ளது. அவர்களின் அலறல் கேட்டு விழித்த சின்னையன், பாம்பை அடித்துக் கொன்றுள்ளார். பின்னர், சிறுவர்கள் இருவரையும் ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்துச் சென்றபோது, அங்கு மருந்துகள் இல்லை என்று கூறி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையில் விஷம் உடல் முழுவதும் பரவி சிறுவன் நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சிதம்பரம் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட சிறுவன் பிரகாஷ்குமார், பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடிக்கான மருந்துகள் இருந்திருந்தால் சிறுவன் நவீன்குமாரை காப்பாற்றி இருக்கலாம் என்று கூறுகின்றனர் உறவினர்கள். அதேபோன்று சுகாதாரத்துறையினர் இப்பகுதியில் சீரமைப்புப் பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன