Advertisement

குஜராத் மற்றும் ஹிமாச்சலில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்? நாளை வாக்கு எண்ணிக்கை

குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுவதை அடுத்து, இருமாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றுள்ளது. டிசம்பர் 9ஆம் தேதி 89 தொகுதிகளுக்கு நடைபெற்றத் தேர்தலில் 66.75%  வாக்குகள் பதிவாகின. டிசம்பர் 14ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 69.99% வாக்குகள் பதிவாகியுள்ளன. 182 தொகுதிகளிலும் மொத்தம் 68.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், இது கடந்த தேர்தலை விட 2.91% குறைவு என தெரிவித்துள்ளது.

மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் குஜராத்தில் கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் பாஜக, 6வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என அக்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் காங்கிரஸ் கட்சியையே ஆட்சியில் அமர வைப்பார்கள் என்று, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இரு கட்டங்களிலும் பதிவான வாக்குகளை எண்ண 33 மாவட்டங்களில் 37 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல், ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை எண்ணப்படுகின்றன. குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலத் தேர்தல்களும், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால், தேர்தல் முடிவுகள் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன