காவலில் இருந்த சுகேஷ் சுதந்திரமாக செயல்பட அனுமதித்ததாக டெல்லி போலிசார் 2 பேர் கைது

இரட்டை இலை லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேசை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, வணிக வளாகங்களுக்கு செல்லவும், தொழில் ரீதியான பேச்சுவார்த்தைகள் நடத்தவும் அனுமதித்ததாக டெல்லி போலீசார் 2 பேர் கைது செய்யப்பட்டதுடன், 5 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டி.டி.வி.தினகரன் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றுத்தர, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க உதவியதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரராவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவரை, டெல்லி போலீசார், அக்டோபர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பெங்களூருக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, சுகேஷை வணிக வளாகங்கள் செல்லவும், தொழில் ரீதியான பேச்சுவார்த்தைகள் நடத்தவும் அனுமதித்து, சுதந்திரமாக செயல்பட அனுமதித்ததாக கூறப்படுகிறது. அதேபோல், பெங்களூரில் தனது தோழிகள் சிலரையும் சுகேஷ் சந்தித்தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, வருமான வரித்துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், சுகேஷுடன் சென்ற காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவலர் நிதின்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தலைமைக் காவலர்கள் ஜீவன், ஜார்ஜ் ஆகியோரும், காவலர்கள் கேசவ் குமார், தர்மேந்தர், புஷ்பேந்தர் ஆகியோரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன