Advertisement
Advertisement

கால்வாய் மற்றும் மழைநீர் தேக்கத்தால் அதிகரித்து வரும் கொசுத் தொல்லை

சேலம் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் ஆங்காங்கே அடைபட்டு கிடப்பதால் நாளுக்கு நாள் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைப் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் காய்ச்சல் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சுமார் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளன. கழிவுநீர் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு, முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், அவற்றில் மண் அடைத்து கிடக்கின்றன. புதிதாக அமைத்த கால்வாய்கள் முறையாக தண்ணீர் தேங்காமல் செல்லும்படி அமைக்காததது உள்பட பல்வேறு காரணங்களால் கழிவுநீர் செல்ல வழியின்றி கால்வாய்களிலேயே தேங்கிக் கிடக்கிறது.

இதுதவிர, தற்போது பெய்த மழையால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கிக் நிக்கிறது. அந்த நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அதிக அளவில் வளர வாய்ப்புள்ளது. மாநகர் பகுதிகளில் முன்பைவிட அதிக அளவில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது.

கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த சேலம் மாநகராட்சி சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் மருந்து அடிப்பது கிடையாது. ஒரு சில இடங்களில் அடித்து விட்டு கடமையை முடித்துக் கொள்கின்றனர். எனவே மழை நேரத்தில் நோய் பரப்பும் கொசுவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கழிவுநீர் கால்வாய்களில் உற்பத்தியாகும் கொசுக்களை அழிக்க வார்டு வாரியாக கொசு மருந்து அடிக்கப்பட வேண்டும், அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் கால்வாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன