காரைக்குடி: இருவரைக் கடத்திய மர்மக் கும்பல் – ஒருவருக்கு அரிவாள் வெட்டு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருவரை கடத்திச்சென்ற கும்பல், அதில் ஒருவரை சரமாரியாக வெட்டி குற்றுயிரும் குலையுயிருமாக வீசியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த உஞ்சனை புதூர் மற்றும் தேவக்கோட்டையை சேர்ந்த ஒரே சாதியை சேர்ந்த இளைஞர்கள் சிங்கப்பூரில் தங்கி ஓட்டுனராக வேலை பார்த்து வந்தனர். சிங்கப்பூரில் பெண் விவகாரம் தொடர்பாக இரு ஊர் இளைஞர்களும் மோதிக்கொண்டதாக கூறப்படுகின்றது. அதில் தொடர்புடைய உஞ்சனை புதூரை சேர்ந்த ராம்கணேஷ் என்பவர் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ராம் கணேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தேவக்கோட்டை சுரேஷ்குமார் என்பவர் கொலை நடந்த அன்றே விமானம் மூலம் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது. அடுத்த 30 வது நாள் சிங்கப்பூரில் வைத்து சுரேஷ்குமாரை மர்மக்கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்தது. இதன் பிறகு அவரது உடல் அங்கிருந்து விமானத்தில் தேவக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பூரில் வேலைபார்த்துவந்த உஞ்சனை புதூரை சேர்ந்த திருப்பதி, வீரப்பபெருமாள் ஆகிய இருவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ராம் கணேஷ் கொலைக்கு தூண்டுதலாக இருந்தவர்கள் என்று கருதப்பட்ட தேவக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன், சூரிய நாராயணன் ஆகியோர் 3 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

அவர்கள் இருவரையும் வெள்ளிகிழமை காரில் தூக்கிப்போட்டு கடத்திசென்ற மர்ம கும்பல் ஒன்று சுப்பிரமணியனை அரிவாளால் சரமாரியாக வெட்டி காரில் இருந்து தூக்கி வீசி உள்ளது. பலத்த காயம் அடைந்த அவருக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கடத்தப்பட்ட சூரிய நாரயணனின் கதி என்ன ? என்பது தெரியாததால் கடத்தல் கும்பலை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ஊரை தாண்டினால் தமிழன், நாட்டை தாண்டினால் இந்தியன் என்று ஒற்றுமையாக இல்லாமல் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் இருபிரிவாக கடல் கடந்தும் பழிக்கு பழியாக மோதிக்கொள்ளும் சம்பவத்தால் இரு ஊரை சேர்ந்தவர்களும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர் ..! கொலை மற்றும் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில், சமரச கூட்டம் நடத்தி இரு ஊர் மக்களின் மனக்கசப்புகளை தீர்த்துவைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *