Advertisement

காதலித்துவிட்டு கைவிட முயன்ற காதலியை குடும்பத்துடன் தீவைத்து எரித்த காதலன்

சென்னை ஆதம்பாக்கத்தில் பெண் மென்பொறியாளர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 6 ஆண்டுகள் காதலித்துவிட்டு கைவிட முயன்ற காதலியை குடும்பத்துடன் தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தின் பரபரப்பான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி.

சென்னை ஆதம்பாக்கம் சரஸ்வதி நகரை சேர்ந்த சண்முகம் கனடா நாட்டில் தங்கி பொலாரீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி ரேணுகா தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் சென்னையில் வசித்து வந்தார்.

மூத்தமகள் இந்துஜா மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இளைய மகள் நிவேதா தனியார் கல்லூரியிலும், மகன் மனோஜ் 11 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்துஜாவுடன் பள்ளியின் ஒன்றாக படித்த ஆகாஷ் என்பவர் வீட்டிற்கு தேவையான எடுபிடி வேலைகளை செய்துவந்துள்ளார். அவர் இந்துஜாவை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு தகராறு செய்ததால், அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு கையில் டர்பன் ஆயிலுடன் இந்துஜாவின் வீட்டுக்கு வந்த ஆகாஷ், வீட்டில் இருந்த இந்துஜா, அவரது தாய் ரேணுகா, தங்கை நிவேதா ஆகிய 3 பேர் மீதும் டர்பன் ஆயிலை ஊற்றி உள்ளார், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து ஆகாஷை அங்கிருந்து செல்லும் படி எச்சரித்த போது யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் கையில் இருந்த கேஸ் லைட்டரை பற்றி வைத்து இந்துஜாமீது வீசிவிட்டு ஆகாஷ் தப்பிச்சென்றான்..!

குபீரென்று இந்துஜா மீது பற்றிய தீ தாய் ரேணுகா, மற்றும் தங்கை நிவேதா ஆகியோர் மீதும் பரவியது. அப்போது செய்வதறியாது திகைத்த இந்துஜா வீட்டின் படுக்கை அறை கட்டிலுக்கு அடியில் சென்று பதுங்கி உள்ளார். இதனால் தப்பிக்க வழியின்றி உடல் முழுவதும் கருகிய நிலையில் வீட்டிற்குள்ளேயே பரிதாபமாக பலியானார் இந்துஜா..! தாய் ரேணுகா, தங்கை நிவேதா ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளி ஆகாஷை உடனடியாக கைது செய்தனர், காதலித்து ஏமாற்றியதால் காதலியை குடும்பத்தோடு சேர்த்து தீவைத்ததாக ஆகாஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளான்.

இந்துஜாவும், ஆகாசும் வேளச்சேரியில் உள்ள குருநானக் பள்ளியில் ஒன்றாக படித்தபோது நட்பாகி உள்ளனர். பள்ளிப்படிப்பு முடிந்து இந்துஜா பொறியியல் படிப்பில் சேர்ந்தார். ஆகாஷ் கலைகல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரி படிப்பில் சேர்ந்த பின்னர் இவர்களது நட்பு காதலாக வளர்ந்துள்ளது. இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். ஆகாஷ் பள்ளி தோழன் என்பதால் இந்துஜா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். தாய் ரேணுகாவும் இதை கண்டு கொள்ளவில்லை.

இந்துஜா வருங்கால மனைவி என்ற நினைப்பில் அவரது வீட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இரவு பகல் பாராமல் செய்து கொடுத்த ஆகாஷ் , இந்துஜாவை கல்லூரிக்கு தனது பைக்கில் கொண்டு சென்று விடுவதும், பின்னர் வீட்டிற்கு அழைத்து வருவதுமென கடந்த 4 ஆண்டுகளாக பாடிகார்டு போல செயல்பட்டுள்ளார். இதனால் கல்லூரி படிப்பை முடித்த ஆகாஷ் வேலைக்கு கூட செல்லவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் பொறியியல் படிப்பை முடித்த இந்துஜா, தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளார். அப்போதும் ஆகாஷ் தான் இந்துஜாவை பைக்கில் கொண்டு சென்று விடுவதை வழக்கமாக செய்து வந்துள்ளான்.

இந்த நிலையில் காதலியின் தாய் ரேணுகாவிடம் இந்துஜாவை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார் ஆகாஷ். அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துஜாவை கடுமையாக கண்டித்துள்ளார் ரேணுகா. இதனால் இந்துஜா அகாஷை சந்திக்காமல் தவிர்த்து வந்துள்ளார். திருமணத்திற்கு இந்துஜாவுக்கும் விருப்பம் இல்லாதது போல் நடந்து வந்ததார். வழக்கமாக காதலன் ஆகாஷிடம் அடிக்கடி செல்போனில் பேசியபடியும் , வாட்ஸ் அப் சாட்டிங்கிலும் இருக்கும் இந்துஜா அவரை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

அண்மையில் கனமழை பெய்தபோது தனது காதலியை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வரும் எண்ணத்தில் ஆகாஷ் அவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்போது இந்துஜா தன்னுடன் வேலை செய்யும் ஒரு இளைஞருடன் பைக்கில் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்

இந்துஜாவை தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போனை எடுக்காததால் ஆத்திரமடைந்த ஆகாஷ், இந்துஜாவின் வீட்டிற்கு வந்து நியாயம் கேட்டுள்ளார். அதற்கு இந்துஜா சரியாக பதில் சொல்லாமல் புறக்கனித்துள்ளார். அதுவரை நட்பாக இருந்த அவரது குடுமபத்தினர் ஆகாஷ பகையாளி போல நடத்தி அவமானப்படுத்தி உள்ளனர். இதையடுத்து தன்னை காதலித்து ஏமாற்றிய இந்துஜாவையும், அவரது குடும்பத்தினரையும் பழிவாங்க திட்டமிட்ட ஆகாஷ் திங்கட்கிழமை இரவு அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு ட்ரபன் ஆயிலுடன் சென்று காதலியை குடும்பத்தோடு கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

கைது செய்யப்பட்ட ஆகாஷை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவனை 28 ந்தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முதலில் ஒருதலை காதலால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ஆகாஷின் வாக்கு மூலத்தால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன