கழிப்பறை இல்லாததால் இன்னல்களை சந்தித்து வரும் பெண்கள்

சேலம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தனிநபர் கழிப்பறையோ, பொதுக் கழிப்பறையோ இல்லாததால், பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

சேலம் மாவட்ட கிராமப்புற பகுதிகளில், பல லட்சம் ரூபாய் போட்டு கட்டப்பட்ட பொதுக் கழிவறைகள் பூட்டிய நிலையிலேயே கிடக்கின்றன. குறிப்பாக வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில், ஒரு கழிப்பறை கூட இல்லை என குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். ஊஞ்சாங்காடு கிராமத்தில் கழிப்பறை இல்லாததால், நள்ளிரவில் பெண்கள் ஆற்றங்கரை, காலியாக உள்ள மனைகள் உள்ளிட்டவற்றை திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். கட்டிய கழிப்பறைகளும் தண்ணீர் வசதி இல்லாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டிக் கிடப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் பெண்கள்….

தங்கள் ஊரில் கழிப்பிட வசதி செய்து தருவதாகக் கூறி அவ்வப்போது அதிகாரிகள் வருவதும் மானியம் பெற்றுத் தருவதாகக் கூறி தங்களிடமே லஞ்சம் கேட்பதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர் அப்பகுதி பெண்கள்.

கழிவறை வசதி இல்லாததால், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு யாரும் பெண் கொடுக்கக்கூட தயங்குவதாகக் கூறப்படுகிறது.

வீரபாண்டி பகுதியில் கழிப்பறைகளுக்காக கொண்டுவரப்பட்ட உயர்மட்ட நீர் தேக்கத் தொட்டிகள் ((Sintex tank)) நூற்றுக்கணக்கில் சமுதாயக் கூடங்களில் தூங்குகின்றன. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, திறந்தவெளிக் கழிவறைகளை தேடிச் செல்லும் பெண்களின் அவல நிலையை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *