Advertisement

கல்லூரி மாணவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சந்தேகத்துக்கு இடமான இருவரிடம் விசாரணை

சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்லூரி மாணவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்துக்கு இடமான இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அபு தெருவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ரஞ்சித், கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் ஐ.டி.ஐ.படித்து வந்தார். மீஞ்சூரில் நண்பரின் திருமணத்துக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர், வள்ளுவர் கோட்டம் செல்லும் சாலையில், குளக்கரை அருகே கழுத்தறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டதில் மாணவர் ரஞ்சித் உயிரிழப்பதற்கு சற்று முன்னால், கழுத்தைப் பிடித்துக் கொண்டு ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.

இதன் பிறகு, கழுத்து அறுபட்ட நிலையிலேயே சிறிது தூரம் ஓடி மாணவன் ரஞ்சித், சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். மாணவனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வேறு பாதையில் தியாகராய நகர் நோக்கித் திரும்பும் காட்சிகளும் சிசிடிவி பதிவில் இடம்பெற்றுள்ளன.

இதன் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், கொலை செய்ய வந்தவர்கள் அவர் உயிருடன் ஓடும் போது அப்படியே விட்டுச் சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, மாணவர் ரஞ்சித் கழுத்தில் ஏதேனும் செயின் அணிந்திருந்து அதை அறுப்பதற்காக, திருடர்கள் சிறிய வகை கத்தியை பயன்படுத்தியிருக்கலாம் என்றும், அப்போது கத்தி கழுத்தில் பட்டு அதனால் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன