Advertisement
Advertisement

கரும்பு லாரிகளுக்கு பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் கரும்பு லாரிகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கூறிய விவசாயிகளுக்கும், சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு பள்ளிகொண்டா சுங்கசாவடியில் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுங்கக் கட்டணம் தற்போது வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

எனவே இந்த ஆண்டு கரும்பு லாரிகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று கூறி, விவசாயிகள் பள்ளிகொண்டா சுங்கசாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கரும்பு லாரியை சுங்கச்சாவடி ஊழியர்கள் நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், சுங்கச் சாவடி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது

அப்போது அங்கு வந்த காவல் துறையினர், சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக பேசியதால், விவசாயிகள் போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வரும் திங்கட்கிழமை வரை கரும்பு லாரிகளுக்கு கட்டணம் இல்லை என்று சுங்கச்சாவடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டால்தான் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், இல்லை என்றால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சுங்கச்சாவடி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன