கட்டப்பஞ்சாயத்து கும்பலின் மிரட்டலால் பெண் தற்கொலை-காவல் ஆய்வாளரின் அலட்சியத்தால் நிகழ்ந்த உயிர்பலி

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கட்டப் பஞ்சாயத்து கும்பலின் மிரட்டலால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து 3 நாட்களாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். ஆத்தூர் காவல் ஆய்வாளரின் அலட்சியத்தால் நிகழ்ந்த உயிர்பலி…

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சகாயம். இவரது மனைவி ஜியோனா. இவர்களுக்கு 10 வயதில் மகள் இருக்கிறாள். கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து கடன் வாங்கி வீடுகட்டினர். மனைவி ஜியோனா பெயரில் வீடு இருந்த நிலையில் கடன் தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 3 வருடம் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் வீட்டாரின் சமரசத்தை ஏற்று மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் ஜியோனா.

இந்த நிலையில் ஜியோனாவின் பெயரில் உள்ள வீட்டை கணவன் பெயருக்கு மாற்றிக்கொடுக்க கோரி புன்னக்காயல் ஊர் கமிட்டியினர் பஞ்சாயத்து செய்துள்ளனர். வீட்டை அபகரிக்கும் நோக்கத்திலேயே கணவன் வீட்டார் தன்னிடம் சமரசம் பேசியது அறிந்து அதிர்ந்து போனார் ஜியோனா..! இது தொடர்பாக ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், ஆத்தூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார், ஜியோனாவின் புகாரை ஏற்க மறுத்து கிராம கமிட்டிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஊர் கமிட்டியினர் கடந்த 8 ந்தேதி ஜியோனாவை கூட்டத்திற்கு வரவழைத்து ஆபாசமாகவும் , அவதூறாகவும் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை என்பதால் மனம் உடைந்த ஜியோனா 11 ந்தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு கணவர் சகாயம், அவரது அக்கா அலெக்டா , சித்தி ராஜகன்னி மற்றும் தன்னை மிரட்டி பஞ்சாயத்து செய்த ஊர்கமிட்டியினர் அனைவரும் காரணம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் ஜியோனா..!

தற்கொலை கடிதம் கிடைத்த பின்னரும் தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவர் மீது கூட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை. ஜியோனாவின் மரணத்தை சாதாரண தற்கொலை என்று வழக்கு பதிந்து மறைக்க முயன்றது ஆத்தூர் போலீஸ். அங்குள்ள காவல் ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர் பச்சைமால் ஆகியோரை கண்டித்து ஜியோனாவின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆத்தூர் காவல்துறையினரின் அட்டகாசம் குறித்து காவல் கண்காணிப்பாளர் மகேந்திரனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் ஜியோனாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 3 நாட்கள் கழித்து செவ்வாய்கிழமை ஜியோனாவின் சடலத்தை உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.

ஜியோனாவின் புகார் குறித்து ஆரம்பத்திலேயே போலீசார் விசாரித்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சோக சம்பவம் நடந்திருக்காது என்றும் ஊர் கமிட்டி என்ற பெயரில் பஞ்சாயத்து செய்யும் நபர்களின் கைப்பாவையாக காவல்துறை செயல்பட்டதே இந்த சோக சம்பவம் நிகழ காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஏற்கனவே ஆத்தூர் காவல்துறையினரின் மிரட்டலால் புன்னக்காயலை சேர்ந்த எஸ்தர் என்ற பெண் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்கு பின்னர் காப்பற்றப்பட்டார். குமாரபணையூரை சேர்ந்த இளைஞர் ஒருவரும், போலீஸ் தொல்லையால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டது குறிப்பிடதக்கது

உயர் அதிகாரிகள் இந்த தொடர் சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுவரும் ஆத்தூர் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

One Response to கட்டப்பஞ்சாயத்து கும்பலின் மிரட்டலால் பெண் தற்கொலை-காவல் ஆய்வாளரின் அலட்சியத்தால் நிகழ்ந்த உயிர்பலி

  1. Mansoor சொல்கிறார்:

    நானும் பாதிக்கப்பட்னேன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன