Advertisement

கடந்த ஆண்டு அக்டோபர் 20க்கு முன் பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறுபத்திரப்பதிவு செய்ய நிபந்தனை விதிக்க கூடாது

கடந்த ஆண்டு அக்டோபர் 20க்கு முன் பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறுபத்திரப்பதிவு செய்ய நிபந்தனை விதிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கின் பேரில் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் மற்றும் நிலங்களை பத்திரப் பதிவு செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் நிலங்களை பத்திரப் பதிவு செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தமிழக அரசு விதிகளை உருவாக்கியுள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதிக்கு முன் பத்திரப் பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறு பத்திரப் பதிவு செய்ய அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறு பத்திரப் பதிவு செய்யும் போது பதிவு செய்தபிறகு வரைமுறைப்படுத்துவதா அல்லது வரைமுறைப்படுத்தியபின் தான் பதிவு செய்ய வேண்டுமா என கேள்வி எழுப்பப்பப்பட்டிருந்தது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கடந்த ஆண்டு அக்டோபர் 20-க்கு முன் பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறு பதிவு செய்யும்போது வரைமுறை செய்யத் தேவையில்லை என்றும் கட்டுமானங்கள் மேற்கொள்ளும்போது மட்டும் கட்டிடத்துக்கான பகுதி அரசாணையின் படி வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதன் படி அக்டோபர் 20-க்கு முன் நிலத்தைப் பதிவு செய்த ஒருவரிடம் இருந்து நிலத்தை வாங்குபவர் அந்த நிலத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ளும்போது அரசாணை விதிமுறைகளின் படி, விதிமீறல்கள் ஏதேனும் இருந்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன