Advertisement

ஒக்கி புயலை பேரிடராக அறிவித்து, கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி மத்திய அரசிடம் மனு அளிக்க தமிழக அரசு முடிவு

கன்னியாகுமரி மாவட்டத்தை பாதித்த ஒக்கி புயலை, பேரிடராக அறிவித்து, மாநில பேரிடர் நிதிக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி, மத்திய அரசிடம் மனு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை வருவாய் நிர்வாக ஆணையர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்ததாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில், தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும், அப்போது, துறைவாரியான பாதிப்புகள் குறித்த விவரங்களின்பேரில், மத்திய அரசுக்கு கோரிக்கை மனுவை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சேதமடைந்த 75 கிலோ மீட்டர் தூர மாநில நெடுஞ்சாலைகள், 98 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட புனரமைப்புப் பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த முடிவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவும், மாநில பேரிடர் நிதிக்கும் மேலாக தேவைப்படும் கூடுதல் நிதியை, மத்திய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை மனுவை அளிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், துரைக்கண்ணு, ஆர்.பி. உதயகுமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அனைத்து துறை தலைமைச் செயலாளர்கள், இயக்குநர்கள் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன