எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு வந்து, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தன்னைப் பார்த்துக் கேள்வி கேட்கட்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் தி.மு.க. தொடக்கநாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் நேற்று முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,தமிழகத்தில் தி.மு.க. எப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களுக்காக பாடுபடுவதன் மூலம், ஆளுங்கட்சியாகவே திகழ்வதாக குறிப்பிட்டார். சிலர் தாங்கள் தான் அடுத்த தலைவர்கள் என்று கூறி கொண்டு, அநாதை தலைவர்களாக வலம்வருவதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

தான் தலைவராக முடியவில்லை என நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் முதலில், பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு வந்து கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் சொல்ல தயாராக இருப்பதாக கூறினார். இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின், அப்படி அங்கும் நியாயம் கிடைக்காவிட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

விழாவில், ஆண்டுதோறும் திமுக சார்பில், வழங்கப்படும் விருதுகளான, பெரியார் விருது N.கிருஷ்ணமுர்த்திக்கும், அண்ணா விருது பெ.சு. திருவேங்கடத்திற்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது அம்பலவாணனுக்கும், கலைஞர் விருது சங்கரி நாராயணனுக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள் க.அன்பழகன், துரைமுருகன், ஐ.பெரியசாமி, முன்னாள் கொறடா சக்கரபாணி, திமுக எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *