இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில், காவல்துறை ஆய்வாளருக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண் பொறியாளரைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், காவல்துறை ஆய்வாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சை காவேரி நகரைச் சேர்ந்த ரவிராஜ் என்பவர் கடந்த 2007ம் ஆண்டில் அளித்த பணமோசடி புகார் தொடர்பாக, தஞ்சை மருத்துவகல்லூரி காவல் ஆய்வாளராக இருந்த சேதுமணிமாதவன் என்பவர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அகிலாண்டேஸ்வரி என்ற பெண் பொறியாளரிடமும் விசாரணை நடத்தியுள்ளார். அடுத்த இரண்டு நாட்களில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதால், தற்கொலைக்கு தூண்டியதாக சேதுமணிமாதவன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சேதுமணிமாதவனுக்கு 2 பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு பிரிவில் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்த நீதிபதி ஆனந்த், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சேதுமணி மாதவன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன