இராமநாதபுரம்:திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் படுகொலை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, திருமணத்திற்கு மறுத்த அத்தை மகளை கழுத்து அறுத்து படுகொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அடுத்தக்குடி கிராமத்தை சேர்ந்த தாரணி என்ற இளம்பெண் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது தந்தை பழனி வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், தாய் மற்றும் சகோதரனுடம் தாரணி வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அதே கிராமத்தை சேர்ந்த உறவுக்காரரான குமார் என்பவர், தாரணியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக தம்மை திருமணம் செய்து கொள்ளுமாறு, தாரணியை, குமார் வற்புறுத்தி வந்துள்ளார். திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் தாரணி தொடர்ந்து மறுத்து வந்ததாகவும், இதனால் தாரணி மீது குமார் கடும் ஆத்திரத்தில் இருந்தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தாரணி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த குமார், அங்கு சென்று தாரணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் தாரணியின் கழுத்தை குமார் அறுத்ததில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தாரணி உயிரிழந்தார். இதையடுத்து, குமாரை அக்கம்பக்கத்தினர் பிடித்து கயிற்றால் கட்டிப்போட்டனர். பின்னர் திருவாடானை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன்பின்னர், குமாரை கைது செய்த போலீசார், தாரணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன