Advertisement

இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து, வரலாற்றில் புதிய அத்தியாயங்களை எழுதும்- பிரதமர் மோடி உறுதி

இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து, வரலாற்றில், புதிய அத்தியாயங்களை எழுதவிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட கூறியிருக்கிறார்.

தலைநகர் டெல்லியில் மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ, புதன்கிழமை குஜராத் மாநிலத்திற்கு வருகை புரிந்தார். அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய இஸ்ரேல் பிரதமரை, மிகுந்த உற்சாகத்துடன் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இதனையடுத்து, இருவரும், விமான நிலையத்திலிருந்து, சபர்மதி ஆசிரமம் வரை காரில் கையசைத்தபடி பவனியாக சென்றனர்…

சபர்மதி ஆசிரத்திற்கு வந்த இஸ்ரேல் பிரதமர், அங்குள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தி வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, காந்தி தனது கதராடைகளுக்காக நூல் நூற்ற ராட்டையில், இஸ்ரேல் பிரதமர் நூல் நூற்று மகிழ்ந்தார்.

அகமதாபாத் நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச பட்டம் பறக்கவிடும் விழாவை முன்னிட்டு, இஸ்ரேல் பிரதமர் பட்டம் பறக்க விட்டார். சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற நிகழ்வில், இஸ்ரேல் பிரதமருக்கு, பட்டம் பறக்கவிட நரேந்திர மோடி கற்றுக்கொடுத்தார்….

இதனைத் தொடர்ந்து, அகமதாபாத்தின் தியோ தோலிரா ((Deo Dholera)) கிராமத்தில், தொழில் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையமான, iCreat மையத்தினை தொடங்கி வைத்து மோடி உரையாற்றினர். முதலில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ, iPad, iPod வரிசையில், உலகம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று “iCreate” என்றார். பிரதமர் மோடியும், தாமும் இளைஞர்கள் என குறிப்பிட்ட இஸ்ரேல் பிரதமர், இளையவர்கள் போல் சுறுசுறுப்பாக உழைத்து வருவதாக கூறினார். Jai Hind..! Jai Bharat..! Jai Israel..! என்று கூறி, பெஞ்சமின் நேதன்யாகூ தனது உரையை நிறைவு செய்தார்…

தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு விவசாயி, ஒரு மரக்கன்றை நடுகிறார் என்றால், அது வளர்ந்து விருட்சமாகி, அது கொடுக்கும் கனிகளை, அடுத்த தலைமுறை அனுபவிப்பதுபோல், iCreate மையத்தின் பலன்களை எதிர்கால தலைமுறை அனுபவிக்கும் என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். iCreate அமைப்பை தோற்றுவித்தபோது, உலகளவில் தொழில்நுட்பங்களை கையாள்வதில் முன்னோடியாக திகழும் இஸ்ரேலுடன் கூட்டு வைக்க நினைத்ததாகவும், அது தற்போது சாத்தியமாகியிருப்பதாகவும் தெரிவித்தார். இதன்மூலம், இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து, வரலாற்றில், புதிய அத்தியாயங்களை எழுதவிருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட கூறினார்.

உணவு பாதுகாப்பு, தண்ணீர், சைபர் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் போன்ற முக்கிய பிரச்சினைகளை சமாளித்து, அதற்கான தீர்வினை எட்டவும், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்பு, பொறியியல், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துதல் மூலம் தொழில் முயற்சியை எளிதாக்கும் நோக்கத்துடன் iCreate குழுமம் உருவாக்கப்பட்டது. இதில் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்படுவதுடன், தொழில்முனைவோருக்கு தேவையான ஆலோசனைகளையும், iCreate வழங்கும். இதன்மூலம், நாட்டின் வேலைவாய்ப்பு பெருகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன