Advertisement

ஆப்கன் தலைநகரில் நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆடம்பர நட்சத்திர விடுதியில் புகுந்து விருந்தினர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

பிரிட்டனின் டென்ஹாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், உலகின் ஆடம்பரமான ஹோட்டல்களில் ஒன்றான இண்டர் காண்டினெண்டலுக்கு ((inter continental)) காபூலிலும் கிளை உள்ளது. இந்த விடுதியின் சமையலறை வழியாக நேற்றிரவு புகுந்த 3 தீவிரவாதிகள் விருந்தினர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் விடுதியில் இருந்த 5 பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் காயம் அடைந்தனர்.

துப்பாக்கி சத்தம் கேட்டதும், அங்கு தங்கியிருந்த பலரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் பலரை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்ததை அடுத்து, அதிரடியாக உள்ளே நுழைந்த பாதுகாப்புப் படையினர் தரைதளத்தில் இருந்த தீவிரவாதிகள் இருவரை சுட்டுக் கொன்றனர்.

மேலும் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அனைவரையும் பாதுகாப்புப் படையினர் விடுவித்தனர். பின்னர் விடுதிக்குள் இருந்த மேலும் ஒரு தீவிரவாதியையும் அவர்கள் சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 41 வெளிநாட்டுப் பயணிகள் உள்பட பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 153 பேரும் மீட்கப்பட்டு விட்டதாக ஆஃப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன