Advertisement

அரியலூர் அருகே அம்மன் கோவிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த ஐம்பொன்சிலை திருட்டு

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அம்மன் கோவிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த ஐம்பொன்சிலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அம்பாப்பூரில், பழமையான பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ராஜேந்திர சோழன் காலத்தில் ஐம்பொன்னால் ஆன அம்மன் மற்றும் வீரபத்திரன் சிலைகள் வழங்கப்பட்டன. கோவிலின் வளாகத்திலேயே இச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. பழமையான இந்த கோவிலில் திருவிழா நாட்களில் மட்டுமே மக்கள் அதிகம் கூடுவார்கள். இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டிற்காக ஊர்பொதுமக்கள் வந்த போது, வீரபத்திரன் சிலை காணாமல் போனது தெரியவந்தது.

ஒன்றரை அடி உயரமும், 10 கிலோ எடையும் கொண்ட இந்த சிலை முழுவதும் ஐம்பொன்னால் செய்யப்பட்டது. பல லட்ச ரூபாய் மதிப்பிலான சிலை காணாமல் போனது தொடர்பாக கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடைசியாக ஆடி மாத திருவிழாவின் போதே வீரபத்திரன் சிலையை பார்க்க முடிந்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிலை எப்போது காணாமல் போனது என்பது குறித்த தெளிவான தகவல் கிடைக்கவில்லை.

இதே கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் கடந்த 2008ம் ஆண்டு நடராஜர்சிலை உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டன. சிலைக்கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள சுபாஷ் கபூருக்கு இதில் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன