Advertisement
Advertisement

அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை 6 கி.மீ தூக்கிச் சென்ற அவலம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் 6 கிலோ மீட்டர் தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறியது.

வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான நடராஜன், வேதாரண்யம் மேலவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சரக்கு வாகனம் மோதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வேதாரண்யம் அரசு மருத்துவமணையில் பிற்பகல் அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உயிரிழந்த நடராஜனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து தர வேண்டும் என அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

வழக்கமாக நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு வந்த நிலையில்,திங்கட்கிழமை அமரர் ஊர்தி வேறு இடத்திற்கு சென்றதாகவும், இதனால் மருத்துவனையில் அமரர் ஊர்தி இல்லை என மருத்துவமனை நிர்வாகத்தினர் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனை அருகே தனியார் ஆம்புலன்ஸ்களும் இல்லாத நிலையில், வேறு வழியின்றி நடராஜனின் உடலை மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் கிடத்திய அவரது உறவினர்கள், சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்றனர். இனியாவது மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன