அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை படுத்தும் திட்டம் 2018 மே 3ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு

அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்தும் திட்டத்திற்கு புதிய விதிகளை வகுத்திருப்பதோடு, அங்கீகாரமற்ற மனைகளை எளிதில் பதிவு செய்யவும் தமிழக அரசு வழிவகுத்து தந்திருக்கிறது.

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அங்கீகாரமற்ற மனைகளை வாங்கிவிட்டு, பல்வேறு இன்னல்களை சந்திக்கும் ஏழைகள், நடுத்தர வகுப்பினரின் இன்னல்களை போக்கும் வகையில், மனைகளை வரன்முறைப்படுத்த ஒரு புதிய திட்டம் வகுக்கப்பட்டு கடந்த மே மாதம் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதிலும் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டதை அறிந்து, நேற்று முன்தினம், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பல்வேறு மாற்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனுமதியற்ற மற்றும் அனுமதியுள்ள மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் காலம் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

விற்கப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப்பிரிவுகளை மூன்று வகைகளாகப் பிரித்து வரன்முறைபடுத்தும் முறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளது உள்ளபடியே வரன்முறை செய்யப்படும். ஒரு மனைப் பிரிவில் குறைந்த பட்சம் ஒரு மனை விற்கப் பட்டிருந்தால் அந்த மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தப்படும்.

மனைப்பிரிவு மேம்பாட்டாளர்கள் தங்கள் மனைப்பிரிவில் வரன்முறைப்படுத்தக் கோரும் விற்கப்படாத மனைகளின் பரப்பளவில் 10 சதவீத நிலத்தை OSR-க்காக ஒதுக்கி உள்ளாட்சிக்கு தானமாக வழங்கி, எஞ்சியுள்ள மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம். மேலும் தனி நபர்களால் வாங்கப்பட்ட மனையை வரன்முறைப்படுத்தும் போது OSR விதிகளிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

மேற்கண்ட இந்த விதிகளின் படி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதிக்கு முன் ஏற்படுத்தப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனை உட்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று வளர்ச்சி கட்டணத்தையும் குறைத்து அறிவித்துள்ளதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. இத்துடன் கூர்ந்தாய்வு கட்டணமாக மனை ஒன்றிற்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன