​​ பேராசிரியை கைது…. பதறும் துணை வேந்தர்..! விசாரணைக்கு ஆளுனர் உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேராசிரியை கைது…. பதறும் துணை வேந்தர்..! விசாரணைக்கு ஆளுனர் உத்தரவு


பேராசிரியை கைது…. பதறும் துணை வேந்தர்..! விசாரணைக்கு ஆளுனர் உத்தரவு

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான செயலுக்கு அழைத்த விபரீத ஆடியோ வெளியானதை தொடர்ந்து, அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவரிடம் விடிய விடிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணி புரிந்து வந்தவர் நிர்மலாதேவி..!

இவர் தனது கணவர் மற்றும் இரு மகள்களையும் பிரிந்து தனி வீட்டில் வசித்து வருகின்றார். இவரது நடவடிக்கை சரியில்லாத்தால் குடும்பத்தினர் இவரை விட்டு விலகி இருப்பதாக கூறப்படுகின்றது.

image

இந்த நிலையில் பேராசிரியை நிர்மலா, அதே கல்லூரியில் படிக்கின்ற 4 மாணவிகளிடம், பல்கலைகழக தேர்வில் 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்ணும், கை நிறைய பணமும் தருவதாக ஆசைவார்த்தை கூறி அவர்களை தவறான செயலுக்கு நிர்பந்தப்பந்த படுத்திய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிர்மலா தேவியை பணியிடை நீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம், மேல் நடவடிக்கை எடுக்காமல் ஒரு மாதமாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் பேராசிரியை நிர்மலா தேவியின் புரோக்கர் தனமான பேச்சும், அதை தாம் தான் பேசியது என்று நிர்மலா தேவியே ஒப்புக்கொண்ட காட்சிகளும் பாலிமர் நியூசில் வெளியானதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாதர் சங்கம் மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்

இதையடுத்து உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலீவால் உத்தரவின் பெயரில் கல்லூரி நிர்வாகத்தினர் அருப்புக்கோட்டை டவுண் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பேராசிரியையின் ஆடியோ, மற்றும் ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அவர் மீது ஐ.பி.சி 76, 370,511 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினருடன் செய்தியாளர்களும் பேராசிரியையின் வீட்டுக்கு சென்றனர். செய்தியாளர்களை கண்டதும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டார் பேராசிரியை நிர்மலா. 4 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் நிர்மலாவின் கோரிக்கையை ஏற்று செய்தியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு  பேராசிரியை நிர்மலாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. 

இந்த சம்பவத்தின் உண்மை தன்மையை அறிய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசி உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, இது குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் "நிர்மலா தேவியும் அந்த மாணவிகளும் யார் என்றே தெரியவில்லை என்றும், குற்றவாளிகள் தங்கள் தவறுகளை மறைக்க பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதனால் இதையெல்லாம் நம்பிவிட முடியாது. என்று கூறி உள்ளார்.

4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவி, தனக்கு மதுரை காமராஜர் பலகலைக் கழகத்தில் கவர்னருக்கு அடுத்தபடியாக இருக்கின்ற செல்வாக்கு மிக்க நபர்களின் நெருக்கம் இருப்பதாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபரீத சம்பவத்தின் பின்னணியில் உள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!