​​ ரஜினிகாந்த், தமிழர் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் என பாரதி ராஜா விமர்சனம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஜினிகாந்த், தமிழர் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் என பாரதி ராஜா விமர்சனம்


ரஜினிகாந்த், தமிழர் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் என பாரதி ராஜா விமர்சனம்

ரஜினிகாந்த் கர்நாடக காவியின் தூதுவர் என கடுமையாக விமர்சித்துள்ள பாரதிராஜா, தமிழர்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம் என்றும் அவரை எச்சரித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகர்கள் முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டு தமிழர்கள் மீது கத்தி வைத்துப் பதம்பார்க்க நினைக்கும் ரஜினி அண்மையில் வன்முறையின் உச்ச கட்டம் என ட்விட்டர் பதிவு வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அறவழியில் போராடிய தமிழர்கள் வன்முறையாளர்களா? என கேள்வி எழுப்பியுள்ள பாரதிராஜா, தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் ரஜினி பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

திரைப்படம் வெளியாகும்போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ரஜினியைப் போன்ற ஒரு நடிகனை தமிழ் திரையுலகம் இதுவரை சந்தித்ததே இல்லை என்றும் பாரதிராஜா விமர்சித்துள்ளார். இலங்கை தமிழர்களை கொன்று குவித்தபோது ரஜினி குரல் கொடுத்தாரா? நியூட்ரினோவுக்கு எதிராக ரஜினி களத்தில் இறங்கிப் போராடினாரா? இல்லை ஓர் அறிக்கையாவது ரஜினி விட்டாரா? மீத்தேன் பற்றி ஏதாவது ரஜினி வாய் திறந்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

எதற்கும் வாய் திறக்காத ரஜினி காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாச்சாரம், ஆரம்பத்திலேயே அதை கிள்ளி எறிய வேண்டும் என்று கூறுவதாகவும், இதன் மூலம் அவர் தமிழன் அல்லாத கர்நாடகக் காவியின் தூதுவர் என்று பட்டவர்த்தனமாக தெரிவதாகவும் பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரிப் பிரச்சனை பற்றி எரிந்தபோது கர்நாடகத்தில் கலைஞர்களெல்லாம் ஒன்றுகூடி எதிர்க்குரல் கொடுத்தபோதும், அங்குள்ள காவலர்கள் தமிழர்களை துரத்தி துரத்தி அடித்தபோதும், தமிழ்நாடு பதிவெண் கொண்ட அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்கியபோதும், வாகன ஓட்டிகளை நிர்வாணப்படுத்தி அடித்தபோதும் ரஜினி ஏன் வாய்திறக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு தங்களையே வன்முறையாளர்கள் என்று ரஜினி பட்டம் சுமத்துவதாகக் பாரதிராஜா கூறியுள்ளார். எங்கோ கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன் அல்லது இந்த நிகழ்ச்சியை கறைப்படுத்த நினைத்த ஒருவன் காவலரை தாக்கியதற்கு தாங்கள் வருந்துவதாகவும், அதற்காக ரஜினி தங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம் என்றும் பாரதிராஜா கூறியுள்ளார்.

பேசும்போது எதைப் பேசுகிறோம் என்பதை ரஜினி உணர்ந்து பேசட்டும் என்றும், இல்லையென்றால் தமிழ் மக்களால் ஓரம் கட்டப்படுவார் என்றும் பாரதிராஜா எச்சரித்துள்ளார்.