சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நெடுஞ்சாலைத்துறை பணிக்கான ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தாம் வரவேற்பதாக, தெரிவித்திருக்கிறார்.
பாலியல் புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யை வைத்தே முதற்கட்ட விசாரணையை நடத்த வைத்து, "டெண்டர் விட்டத்தில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை" என்று உயர்நீதிமன்றத்திற்கே அறிக்கை கொடுக்க வைத்ததாக, ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆதாரங்கள் அழிப்பிற்கு இடமளித்து விடாமல் காலதாமதமின்றி சி.பி.ஐ. இந்த டெண்டர் ஊழல் வழக்கின் ஆவணங்களைப் பெற்று விசாரணையை துவங்கிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.