​​ குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம்
Polimer News
Polimer News Tamil.

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம்

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த உண்ணாமலைக்கடை பகுதியைச் சேர்ந்த பொறியாளர் பிபின் தாமோதரன் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்தின் அண்ணன் மகனான பிபின் தாமோதரன் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் மணக்காவிளை பகுதியில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த புனிதாவின் உடல் பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோரின் அஞ்சலிக்குப் பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. உயிரிழந்த புனிதாவுக்கு திருமணமாகி 44 நாட்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த சுபாவின் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடலூர் எம்.பி., அருண்மொழித்தேவன், சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், பாண்டியன், ராமு உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வெள்ளாற்றங்கரையில் உள்ள மயானத்தில் சுபாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த அகிலாவின் உடலுக்கு பொதுமக்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், உறவினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.