​​ குடும்ப தகராறு : ஒன்றரை வயது குழந்தை தூக்கில் போட்டு கொலை - தாய் தூக்கிட்டு தற்கொலை
Polimer News
Polimer News Tamil.

குடும்ப தகராறு : ஒன்றரை வயது குழந்தை தூக்கில் போட்டு கொலை - தாய் தூக்கிட்டு தற்கொலை

சென்னை தரமணியில் குடும்ப தகராறு காரணமாக ஒன்றரை வயது குழந்தையை தூக்கில் போட்டு கொலை செய்துவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தரமணியைச் சேர்ந்த கணபதி என்பவருக்கும், கரூரைச் சேர்ந்த சுமித்ரா என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்றும் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை கணபதி வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் இருந்த சுமித்ரா மகன் கிருஷ்வாவை தூக்கில் போட்டு கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நண்பகலில் வீட்டுக்கு வந்த கணபதி மகன் மற்றும் மனைவி சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். கொலை மற்றும் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த தரமணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.