நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள முருகேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் சசிகலா. கணவனை இழந்த விதவையான இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், திசையன்விளையில் உள்ள கடையில் வேலைபார்த்து வந்தார். அப்பொழுது சசிகலாவுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்ற இளைஞர், மறுவாழ்வு தருவதாகக் கூறி சசிகலாவை காதல்வலையில் வீழ்த்தியுள்ளார்.
கடை விடுமுறை நாட்களில் சசிகலாவை வெளியூர்களுக்கு அழைத்துச்சென்று ஊர் சுற்றிய முத்து விரைவில் திருமணம் செய்வதாக கூறி எல்லைமீறியதாகக் கூறப்படுகிறது. இதனால் சசிகலா இரு முறை கர்ப்பமாகி காதலனின் வற்புறுத்தலின் பேரில் கருவைக் கலைத்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாகி மூன்று மாதம் கடந்த நிலையில் திருமணம் செய்ய மறுத்த முத்து தற்கொலை செய்வதாகக் கூறி மீண்டும் கருவைக் கலைக்க வற்புறுத்தி உள்ளான்.
இந்நிலையில் சசிகலா கடந்த சில தினங்களுக்கு முன்பு திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் முத்துவை அழைத்து விசாரித்த போது சசிகலாவை திருமணம் செய்து கொள்வதாக போலீசாரிடம் ஒப்புக் கொண்டு எழுதிக்கொடுத்து சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இன்றுவரை சசிகலாவை முத்து திருமணம் செய்யவில்லை. மேலும் தன்னை ஏமாற்றி அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளையும் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டிய சசிகலா, காதலன் முத்துவின் வீட்டு முன்பு தன்னை திருமணம் செய்ய கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்
இதே போன்று மற்றொரு சம்பவத்தில் திசையன் விளையைச் சேர்ந்த பிரியங்கா என்ற நர்சிங் கல்லூரி மாணவியை 4 வருடங்களாக காதலித்து வந்த அஜித் குமார் என்ற இளைஞர், பிரியங்காவிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அத்துமீறிவிட்டு ஆந்திராவில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக காதலி பிரியங்காவை ஏமாற்றி, அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை அஜித் குமார் ஏமாற்றி வாங்கிச் சென்றதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தன்னை ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரியங்கா தனது குடும்பத்தினருடன் திசையன் விளை காவல் நிலையம் முன்பு காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இரு சம்பவங்கள் குறித்தும் விசாரித்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலிக்கும் போது பெண்கள் கட்டுபாட்டோடும் உஷாராகவும் இருக்க தவறினால் கண்ணீருடன் காதலன் வீட்டு முன்பு தவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் என்பதற்கு இந்த தவிப்பு காட்சிகளே சாட்சி..!