திருவள்ளூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5 லட்சம் ரூபாய் பணத்தை திருடியதோடு, அங்கேயே அமர்ந்து சாவகாசமாக எண்ணிக்கொண்டிருந்த கொள்ளையர்களை , வீட்டு உரிமையாளர்கள் மடக்கி பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்களின் ஒருவன் வேட்டியை இழந்து தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
திருவள்ளூர் அருகே கீழ்நல்லாத்தூர் ஊராட்சி பல்லவன் திருநகரை சேர்ந்தவர் ராஜேஷ். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், தனது குடும்பத்தினருடன் செங்கல்பட்டு மாவட்டம் பிலாப்பூர் கிராமத்தில் பூர்வீக வீட்டிற்கு பொங்கல் வைப்பதற்காக சென்றார்.
சொந்த ஊரில் 3 நாட்கள் பொங்கலைக் கொண்டாடி விட்டு ராஜேஷ் தனது மனைவி ரேவதி , மாமனார் சீனிவாசன் மற்றும் குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் கேட் பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டின் மரக்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ராஜேஷின் மாமனார் சீனிவாசன், அவசர அவசரமாக உள்ளே சென்று பார்த்தபோது இரு கொள்ளையர்கள் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை மொத்தமாக திருடி, எண்ணிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் திருடர்களை பிடிக்க முயன்றபோது அவர்களை தாக்கிய திருடர்கள் பணத்தை அள்ளி பையில் போட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
தப்பி ஓடிய திருடன் ஒருவனின் வேட்டியை பிடித்து இழுத்து நிறுத்த முயன்ற போது சிக்கிய கொள்ளையன், அவிழ்த்து விட்டு உள்ளாடையுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றான். இதனையடுத்து மணவளநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வேட்டியை இழந்த திருடர், தனது சக கொள்ளையனுடன் இருசக்கர வாகனத்தில் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அந்த இரு கொள்ளையர்களையும் தேடிவருகின்றனர்.
கீழ்நல்லாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாகவும் திருட்டு சம்பவங்களை கண்காணிக்க ஊராட்சி சார்பில் வைக்கப்பட்ட 6க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்தும் போலீசார் நீண்ட நாட்களாக விசாரித்து வரும் நிலையில், குறைந்தபட்சம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்தாவது இந்த திருடர்களையாவது உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.