6 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழப்பு – சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யோகி ஆதித்யநாத் உறுதி

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எம்.பியாக வெற்றி பெற்ற கோரக்பூர் தொகுதியில், பிஆர்டி (BRD) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான இங்கு கடந்த 6 நாட்களில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளினால் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதேசமயம், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகித்து வந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை இருந்ததால், ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது பற்றி ஊழியர்கள் எச்சரித்து இருந்தும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாகவும் புகார் கூறப்படுகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை உத்தரப்பிரதேச சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங்கும் ((Siddharth Nath Singh)), மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் அசுதோஷ் டாண்டனும் ((Ashutosh Tandon)) மறுத்துள்ளனர். யோகி ஆதித்யநாத் உத்தரவை அடுத்து இருவரும் கோரக்பூர் மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். கோரக்பூர் நிலவரத்தை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் அலுவலகமும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இதனிடையே, அலட்சியமாக செயல்பட்டதாக பிஆர்டி மருத்துவக்கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிலுவைத் தொகைக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகத்தை நிறுத்திய லக்னோவை சேர்ந்த நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன