3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 135 ரன்கள் எடுத்து பாலோ ஆன்

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 487 ரன்கள் குவித்த இந்திய அணி, இலங்கையை வெறும் 135 ரன்களில் சுருட்டியதால் அந்த அணி ஃபாலோ ஆன் ஆனது.

பல்லெகெலேவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 487 ரன்கள் எடுத்தது. தவான், பாண்ட்யா ஆகியோர் சதம் அடித்தனர். பாண்ட்யா 86 பந்துகளில் 7 சிக்சர்கள் அடித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 8-வது வீரராக களமிறங்கி அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பாண்ட்யா பெற்றார்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. கருணாரத்னே, தரங்கா ஆகியோர் முகமது சமியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சண்டிமால் மற்றும் மெண்டிஸ் ஓரளவு தாக்குப்பிடித்த நிலையில், சண்டிமால் 48 ரன்களில் வெளியேறினார். இதை அடுத்து இலங்கை அணி வீரர்கள் வரிசையாக நடையைக் கட்டினர்.

இறுதியில் இலங்கை அணி 135 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது சமி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 352 ரன்கள் பின் தங்கிய நிலையில், ஃபாலோ ஆன் பெற்ற இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கியது.

ஒரு விக்கெட்டை இழந்து 19 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன