24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வுமையம்

வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும் உள்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலோர பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சூழற்சி உருவாகியுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மேலடுக்கு சுழற்சியால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். வரும் 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும் உள்மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் அவர் அறிவித்தார்.

சென்னையை பொருத்த வரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் பாலச்சந்திரன் கூறினார். தென்மேற்கு பருவமழையை பொருத்த வரையில் கடந்த ஜுலை 1 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் சராசரியாக 177 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளதாகவும், இது இயல்பைவிட 21 சதவீதம் அதிகம் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளார்.

கடந்த 24 மனி நேரத்தை பொருத்த வரையில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 14 சென்டிமீட்டர் மழையும், திருப்பத்தூர், திருவையாறு,திருவண்ணாமலை, திண்டிவனம் ஆகிய இடங்களில் தலா 10 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன