2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயார் – ராகுல் காந்தி

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்கத் தயார் என ராகுல்காந்தி அறிவித்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள உட்கட்சித் தேர்தலில் அவர், காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் 2 வார சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு, தான் முழுமையாக தயாராகி விட்டதாகவும், பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்களுக்கு மேல் இருப்பதால், அடுத்த ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் ராகுல் காந்தி முழுமையாக கவனம் செலுத்த இருப்பதாக, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களை ராகுல்காந்தி கருதுவதால், பாஜகவை வீழ்த்த பல புதிய உத்திகளை கையாளுவார் என்று அக்கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன