வைகை அணையை தெர்மாகோல் அட்டைகளால் மூடிய அமைச்சரின் செயலை கண்டு சிரித்த மக்கள்

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், வறட்சி காரணமாக 23 அடியாக சரிந்து காணப்படுகிறது. தற்போது இருக்கும் தண்ணீரைக் கொண்டு, இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே மதுரை மாநகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது சுட்டெரித்து வரும் வெயில் காரணமாக, வைகை அணையில் தேங்கியிருக்கும் தண்ணீர் வேகமாக ஆவியாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு புதிய திட்டத்தை தீட்டியுள்ளது.


இதற்காக, சாரை சாரையாக வாகனங்கள் அணி வகுக்க அமைச்சரும், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும், வைகை அணையை நோக்கி படையெடுத்தனர்.
வைகை அணையின், மேற்பரப்பை தெர்மாகோல் அட்டைகளைக் கொண்டு மூடி, தண்ணீர் ஆவியாவதை தடுப்பதுதான் இவர்களின் திட்டம். பரந்து விரிந்த வைகை அணையை சிறு சிறு தெர்மாகோல் துண்டுகளை டேப் மூலம் ஒட்டி, அவற்றில் சிலவற்றை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர்ராஜூ, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் ஆகியோர் தண்ணீரில் மிதக்கவிட்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர். 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வைகை அணையை, வெறும் 300 தெர்மாகோல் அட்டைகளை கொண்டு அமைச்சரும் ஆட்சியர்களும் வெப்பத்தில் இருந்து காக்க முயற்சித்னர். இதற்கு, 10 லட்ச ரூபாய் செலவானதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
பரிசல் மூலம் அணையில் மிதக்கவிட்டப்பட்ட தெர்மாகோல் அட்டைகள், பரிசல் கரை திரும்புவதற்குள் கரை திரும்பி காற்றில் தரையை நோக்கி பறக்க ஆரம்பித்துவிட்டன. தெர்மாகோல்கள் பலவும் ஒன்றன் மீது ஒன்றாக ஏறிமிதக்க ஆரம்பித்தன.
அணையை தெர்மாகோல் மூலம் மூடும் பணியை பார்த்து உள்ளூர் மக்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். இது போன்ற ஒரு நூதன யோசனையை அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் வழங்கியது யார் என்றும் பொதுமக்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்களிடம், மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கவேண்டும் என ஆண்டவனிடம் வேண்டிக்கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தி சென்றார்.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் அணையின் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க ஷேட் பால் போன்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், அணைகளில் நான்கைந்து தெர்மாகோல் அட்டைகளை மிதக்கவிட்டு பொதுமக்களை சிரிக்க வைக்காமல், shade balls எனப்படும் கருப்பு நிற பிளாஸ்டிக் பந்துகளைக் கொண்டு அணையை முழுவதுமாக வெளிநாடுகளில் மூடி விடுகிறார்கள். இப்படிச் செய்யும்போது, சூரிய வெப்பத்தை கருப்பு நிற பந்துகள் கிரகித்துக்கொண்டு தண்ணீரில் வெப்பம் ஊடுறுவாமலும், தண்ணீர் ஆவியாகாமலும் தடுக்கின்றன. எனவே, வெளிநாடுகளை பின்பற்றி அணையை கருப்பு நிற பந்துகளால் மூடவேண்டும் என விபரம் அறிந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன