வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 2 குழந்தைகள் பலியாகி உள்ளது. டெங்குவால் இறந்தவர்களை மர்மகாய்ச்சலால் இறந்ததாக கூறி மறைக்க முயற்சி செய்வதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

டெங்கு கொசுவை ஒழிப்பதில் காட்டும் தீவிரத்தை விட, டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மறைப்பதில் சுகாதாரதுறையினர் தீவிரம் காட்டி வருவதாக காய்ச்சல் பாதிப்புக்குள்ளான மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

டெங்கு காய்ச்சலுக்கு சேலம் மாவட்டத்தில் அம்மாபேட்டை குமரன் காலனியை சேர்ந்த மெஹரஜ்பானு என்ற பெண் ஞாயிற்றுகிழமை உயிரிழந்த நிலையில் , சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி செல்வமணி என்பவரின் 8 வயது மகன் தருண் திங்கட்கிழமை உயிரிழந்தான். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த 6 வயது சிறுமி மகேஸ்வரி டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக பலியானாள். இதனால் திங்கள் கிழமை ஒரே நாளில் இருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். சேலம் சிறுவனின் தாயும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அண்மையில் பெய்த மழை காரணமாக பல்கிபெருகி மக்களுக்கு சொல்லொன்னா துயரை கொடுத்துக்கொண்டிருக்கும் டெங்கு கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை மறைப்பதிலும், டெங்கு காய்ச்சல் குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கையை கொடுக்க மறுப்பதிலும் சுகாதாரதுறையினர் ஆர்வம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.

டெங்கு காய்ச்சலை மறைப்பதால் சேலத்தில் நாளுக்கு நாள் காய்ச்சலால் பதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. சேலத்தில் திங்கட்கிழமை நிலவரப்படி 330 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துவரும் நிலையில் ஒரே நாளில் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 50 பேர் கூடுதலாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே போல திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்சல் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க, காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் வழக்கமாக அனுமதிக்கப்படும் தரைதளத்தில் உள்ள 24 மணி நேர சிகிச்சை வார்டில் அனுமதிக்காமல் படுக்கைகளை காலியாக வைத்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மட்டும் 2வது தளத்திற்கு மாற்றி நெருக்கடியான இடத்தில் வைத்து டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து வருகின்றது அரசு மருத்துவமனை நிர்வாகம்…! என்கின்றனர் நோயாளிகளின் உறவினர்கள்.

மன்னார்குடியில் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள் கொசுவலை பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தமிழகத்தின் மேற்கு மண்டல பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் டெங்கு வைரசை பரப்பும் எடிஸ் கொசு உற்பத்தியை தடுப்பதை விட்டு விட்டு மாவட்ட வாரியாக டெங்கு காய்ச்சல் குறித்து தகவல் வெளியாவதை தடுப்பதில் கவனம் சுகாதாரத்துறை செலுத்திவருவதாக புகார் எழுந்துள்ளது.

மக்கள் மழை நீர் தேங்காத வண்ணம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டு விழிப்புடன் இருந்தால் மட்டுமே டெங்கு கொசு உற்பத்தியை ஒழித்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன