வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீரை கொள்ளையடிக்கும் கும்பல்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது மிட்டப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையினை நம்பி சுமார் 500 ஏக்கரிலும், சுற்றுவட்டார பகுதிகளை சேர்த்து 9 ஆயிரம் ஏக்கர் பரப்பிலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தாண்டு முதல்போக சாகுபடிக்காக அணையில் இருந்து, கடந்த 15ந்தேதி, 155 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கபட்டதை அடுத்து, நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பாசன கால்வாய்களின் குறுக்கே, சிறு கால்வாய்களை வெட்டி, சிலர் தங்களுடைய கிணற்றில் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிணற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தினாலும் ஏற்று கொள்ளலாம் என்று கூறிய மக்கள், ஆனால் அதை தவிர்த்து லாரிகளுக்கும் டிராக்டர்களுக்கும் தண்ணீரை தாரளமாக விற்பனை செய்யப்படுவதாக வேதனையை தெரிவிக்கின்றனர்.

ஒரு லாரிக்கு 800 முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை, விவசாய நீரில், கொள்ளை லாபம் அடைவதாகவும் புலம்புகின்றனர் கிராம மக்கள். இதுபோன்ற செயல் மிட்டப்பள்ளி கிராமம் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளிலும் அறங்கேறி வருகிறது.

இந்த அட்டூழியத்தால், பாசன கால்வாய் நீர், அணையில் இருந்து 40 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பாரூர் ஏரிக்கு 24 மணிநேரத்தில் செல்லும் நிலையில், 2 நாட்களை கடந்தும் ஏரியை அடையாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வெட்ட வெளியில் அனைவருக்கும் தெரிந்தே நடக்கும் இந்த நீர் திருட்டை, கண்டும் காணாதது போல் பணிகளை செய்யும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? என்ற கோரிக்கை அனைவரது குரலாக ஒலிக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன