ரோஹிங்யா முஸ்லீம்களை வெளியேற்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தடை -உச்சநீதிமன்றம்

ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கையை அடுத்த மாதம் 21 ஆம் தேதி வரை மேற்கொள்ளக் கூடாது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மரில் இருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள 40 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றப் போவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரோஹிங்யா சமூகத்தைச் சேர்ந்த இருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ரோஹிஹ்யா முஸ்லிம்களில் சிலருக்கு பயங்கரவாத இயக்கங்களோடு தொடர்பிருப்பதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நாட்டின் பாதுகாப்புக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, அகதிகளின் மனித உரிமை சார்ந்த நலனுக்கும் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன