ரூ. 200 -க்கு ஆண்ட்ராய்டு போன் வாங்க அலைமோதிய கூட்டம்

ராமநாதபுரத்தில் 200 ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு செல்போன் தருவதாக விளம்பரம் செய்து புதிதாக திறக்கப்பட்ட கடை முன், கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் திரண்டதால் கடையை மூடிவிட்டு உரிமையாளர் ஓட்டம் பிடித்தார்.

ராமநாதபுரத்தில் உள்ள சாலைத்தெருவில் இன்று புதிதாக திறக்கப்பட்ட சென்னை மொபைல்ஸ் என்ற கடை நிர்வாகம், அறிமுக சலுகையாக முதல் நாள் மட்டும் 200 ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு போன் வழங்கப் படுமென உள்ளூர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்திருந்தது. இதன்பேரில், திறப்பு விழா நாளான இன்று காலை முதலே, சாரல் மழையையும் பொருட்படுத்தாமல், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கடை முன் திரண்டனர்.

உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் சாலைத்தெரு மட்டுமின்றி அரண்மனை, கேணிக்கரை வரை கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கடையை திறக்க வந்த ஊழியர்கள் கூட்டத்தைக் கண்டு திகைத்துப் போயினர். 200 பேருக்கு மட்டுமே சலுகை விலையில் செல்போன் தர முடியும் என்றும், இதற்காக டோக்கன்கள் தரப்படுமெனவும் அவர்கள் கூறினர். இதனால், டோக்கன்களை வாங்க கூட்டத்தினர் அடித்துப்பிடித்து முன்னேறியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் டோக்கன் கொடுக்க முடியாமல் ஊழியர்களும், உரிமையாளரும் ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அவர்களை பொதுமக்கள் விரட்டிச் சென்றனர். தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார், அங்கு திரண்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். சூழலை எதிர்கொள்ள முடியாத ஊழியர்கள், செல்போன் கடையை மூடிவிட்டுச் சென்றனர். சிலர் அப்போதும் அவர்களை விடாமல் பின்தொடர்ந்து சென்றனர். மேலும் சிலர், சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் கடை திறக்கப்படும் என்று நம்பி அங்கேயே காத்திருக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன