ரயில்களில் முன்பதிவுப் பெட்டிகளில் தூங்குவதற்கான நேரம் ஒரு மணி நேரம் குறைப்பு

ரயில்களில் படுக்கை வசதியுள்ள முன்பதிவுப் பெட்டிகளில் தூங்குவதற்கான அதிகாரபூர்வ நேரத்தில் நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் படுக்கை வசதிப் பெட்டிகளில் முன்பதிவு செய்தவர்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை தூங்கலாம் என்பது ஏற்கெனவே இருந்த விதி. ஆனால் இந்த விதியை மதிக்காமல் அதிக நேரம் உறங்கும் பயணிகளால் சக பயணிகள் அமர முடியாத நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக புகார் எழுந்தது. உதாரணமாக நீண்ட தூரப் பயணங்களின் போது, லோயர் பெர்த் எனப்படும் பகல் நேரங்களில் பயணிகள் வழக்கமாக அமருவதற்கான பகுதியில் மற்ற பயணிகளுக்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் பயணிகளால் பிரச்சினை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனால் மிடில் பெர்த், அப்பர் பெர்த் ஆகியவற்றில் உள்ள பயணிகள் கீழே இறங்கிவந்து அமர முடியாத நிலை தொடர்பாகவும் புகார் எழுந்தது. இதேபோன்று பயணத்துக்காக ரயில்களில் ஏறும் பயணிகள் சிலர் மற்றவர்கள் குறித்து கவலைப்படாமல் ரயில்களில் ஏறியவுடனேயே பெர்த்தை விரித்து படுத்துவிடுவதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் பயணிகளின் நலனை உறுதி செய்யும் வகையில் ரயில்வே புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி பயணிகள் உறங்குவதற்கான அதிகாரபூர்வ நேரத்தில் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விதி முறையாகக் கடைபிடிக்கப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு சக பயணிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன