Advertisement

மேம்பால கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அதிமுகவினர் கல்வீசித்தாக்கியதாக புகார்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மேம்பால கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அதிமுகவினர் கல்வீசித்தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தாண்டம் அருகே 180 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும், மாநில நெடுஞ்சாலைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் 10 கிலோமீட்டர் அளவுக்கு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்தி, பணிகளை முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார், அப்பகுதிக்கு வந்தார். அப்போது போக்குவரத்து தடைக்காகவும், பாதுகாப்புக்காகவும் வைத்திருந்த தடுப்பு வேலியை அகற்றுமாறு, எம்.பி. விஜயகுமார் கட்சியினரிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து தடுப்பு வேலிகளை அங்கிருந்த அதிமுகவினர் அகற்றி தூக்கி எறிந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கட்டுமான ஊழியர்கள், இதுகுறித்து கேட்டபோது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கட்டுமான ஊழியர்களை, அதிமுகவினர் கற்களை வீசித் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஜெகதீஸ் என்ற கிரேன் ஓட்டுனர் காயமடைந்து, குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன