முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் டெங்குவுக்கு சிகிச்சை – தமிழக அரசு

முதலமைச்சரின் விரிவான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்குவுக்கு சிகிச்சை பெறலாம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முதலமைச்சரின் விரிவான இலவச காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு சேர்க்கப்படாததால் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றி சிகிச்சை பெறமுடியவில்லை எனக் கூறித் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில் எல்லா காய்ச்சலும் டெங்கு அல்ல என்றும், கொசு மூலம் டெங்கு பரவுவதால் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள பெதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொசுக்களை கட்டுப்படுத்த 13 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், டெங்குவை கண்டறிய இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழகத்தில் 125 சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

23 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு 837 இரத்த அணு சோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் போதிய அளவில் மருந்துகளும், பரிசோதனை கருவிகளும் இருப்பில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாரம்பரிய மருத்துவ முறைகளின்படி நிலவேம்பு குடிநீர் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளதால், அந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெங்குவுக்கும் சிகிச்சை பெறலாம் என்றும் சுகாதாரத்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன