மருத்துவ படிப்பில் 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணை செல்லாது – உயர்நீதிமன்றம்

மருத்துவப் படிப்புச் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவப் படிப்புச் சேர்க்கையில், மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதை எதிர்த்து, சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் படித்த சுமார் 40 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த கடந்த 14ஆம் தேதி தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து, 2 நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த இருப்பதாக தெரிவித்தது.

நீட் தேர்வில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி கேள்விகள் கேட்கப்பட்டதால், மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு சமவாய்ப்பு கிடைக்காது என்பதால், 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட்டதாகவும், இதை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை என்றும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.எஸ்.இ. மாணவர் தரப்பினர், இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி, மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடியாது என்று வாதிட்டனர். ஆனால், நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், தாங்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் தரப்பினர் வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ் மற்றும் தண்டபாணி அடங்கிய அமர்வு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதுடன், தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர்.

நீட் தேர்வின் அடிப்படையில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதிகள், மாநிலப் பாடத்திட்ட மாணவர்களைத் தயார் படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக தெரிவித்தனர். மருத்துவப் படிப்பை விரும்பும் மாணவர்களை 3 முதல் 5 ஆண்டுகள் வரை தயார்படுத்த வேண்டியது அவசியம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆசிரியர்களின் கவனக்குறைவே காரணம் எனவும் குறிப்பிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன