மருத்துவர்கள் பணியில் இல்லாத காரணத்தால் சிறுமி உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் சிறுமி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் புகார் உள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் சந்தானம் என்பவரும் காரில் பெங்களூர் சென்று கொண்டிருந்தபோது ஆம்பூரையடுத்த வடப் புதுப்பட்டு என்ற இடத்தில் லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேபோல ஆம்பூரை அடுத்த ராலே கொத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகள் வைஷ்ணவி திடீர் நெஞ்சுவலி காரணமாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருந்ததால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜ்குமார், வைஷ்ணவி ஆகியோர் உயிரிழந்ததையடுத்து மருத்துவ மனையின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் சாந்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் மருத்துவமனையில் சாந்தி விசாரணை நடத்தினார்.

16 மருத்துவர் பணியிடங்கள் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றுவதாகவும் 10 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களிலும் சிலர் விடுப்பில் இருப்பதால் ஏற்பட்ட மருத்துவர் பற்றாக்குறையே இரண்டு உயிரிழப்புகளுக்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன