மத்திய குழு டெங்கு தொடர்பாக சுகாதாரத் துறையுடன் ஆலோசனை

மத்திய குழு தமிழகத்தில் 3 நாட்களுக்கு தங்கியிருந்து டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளது. மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியாக 256 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆராய, மத்திய குழு சென்னை வந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையில் மருத்துவர்கள் சுவாதி துப்லிப்ஸ், கல்பனா பர்வா உள்ளிட்ட 5 பேர் அடங்கிய இந்த குழு, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் சத்தியகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டெங்குவால் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன மற்றும் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து மத்தியக் குழுவினர் கேட்டறிந்தனர்.

ஆலோசனைக்குப் பிறகு மத்தியக் குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசிடமிருந்து 256 கோடி ரூபாய் கூடுதல் நிதி கேட்டிருப்பதாக தெரிவித்தார். மத்திய குழுவினர் 3 நாட்கள் வரை தமிழகத்தில் தங்கியிருப்பார்கள் என்றும், மாவட்டங்களுக்கும் செல்ல வாய்ப்பிருப்பதாக அவர் கூறினார்.

தமிழக அரசு டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட மத்திய குழுவின் தலைவர் அசுதோஷ் பிஸ்வாஸ், விழிப்புணர்வும் அதிக அளவில் இருப்பதாகக் கூறினார். விழிப்புணர்வு அதிக அளவில் இருந்தபோதிலும், அதற்கேற்ப பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில், தண்ணீர் தேங்கும் கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அசுதோஷ் பிஸ்வாஸ் வலியுறுத்தினார். நிலவேம்பு கசாயத்தை பொறுத்தவரையில் அதை தாங்கள் தேசிய அளவில் பரிந்துரைக்கவில்லை என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்பட்சத்தில் அதை மருந்தாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை என்றும் அசுதோஷ் கூறினார். அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ள டெங்கு மரணங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் எனவும் மத்திய குழுவின் தலைவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன