மதுரையில் டாஸ்மாக் மதுக்கடையை சூறையாடிய பெண்கள் கைது

மதுரை அருகே டாஸ்மாக் மதுக்கடை மற்றும் மதுபானக் கூடத்தை அடித்து நொறுக்கிய பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கூடல்நகரை அடுத்த அஞ்சல் நகரில் மூன்று டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அங்கு மது அருந்தும் குடிமகன்களால் அப்பகுதி பெண்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக் கூறி மதுக்கடைகளை மூட அப்பகுதி பெண்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதுக்கடையை சூறையாடினர். மதுக்கடையில் இருந்த மதுபாட்டில்களை சாலையில் வீசி உடைத்த அவர்கள், அருகே இருந்த மதுபானக் கூடத்தில் இருந்த நாற்காலிகள் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினர்.

இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை மதுபானக்கூடத்திற்குள்ளேயே வைத்துப் பூட்டினர். பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன