மக்களின் உணர்வைத்தான் கமல் வெளிப்படுத்தியுள்ளார் – மு.க.ஸ்டாலின்

ஊழல் அரசு என்று பொதுமக்கள் சொல்லி வருவதை கமல்ஹாசன் வெளிப்படுத்தியதற்கு, அவர் மீது வன்மம் கொண்டு கருத்து தெரிவிப்பதும், மிரட்டுவதும் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் அடுத்தடுத்து விமர்சித்து வருவது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சியாளர்கள் தங்கள் மீதான விமர்சனங்களின் உண்மையை உணர்ந்து அவற்றுக்கு விளக்கமளிப்பதும், தவறுகளைத் திருத்திக்கொள்வதும்தான் ஜனநாயகத்திற்கு அழகு என்று கூறியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சியோ, உண்மையை கூறுவோரை மிரட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்ற மக்களின் உணர்வைத்தான் நடிகர் கமல்ஹாசன் வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்காக அவரை பாய்ந்து பிறாண்டும் வகையில் தமிழக அமைச்சர்கள் கருத்து தெரிவித்தும், சட்டத்தைக் காட்டி மிரட்டுவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கமல் மீது வன்மம் கொண்டு, அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பதும், மிரட்டுவதும் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ள அவர், அமைச்சர்களை முதலமைச்சர் வேடிக்கை பார்ப்பது அடாவடி செயல் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், அன்பு சகோதரர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை என்றும், தனது ஆதங்கங்களில் பல தங்களின் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் தனக்குப் பெரிய ஆறுதலே என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது என்றும், பலிக்கவும் கூடாது என்றும் டுவிட்டரில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!