Advertisement
Advertisement

போலி நிறுவனங்களின் இயக்குனர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சசிகலா, இளவரசி, உம்மண் சாண்டி பெயர்கள்

நீக்கப்பட்ட போலி நிறுவனங்களின் இயக்குனர் பட்டியலில் வி.கே.சசிகலா, கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

கருப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், பண மோசடியை தடுக்கும் நோக்கிலும் போலி நிறுவனங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மூன்றாண்டுகளாக நிதி அறிக்கை மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாத போலி நிறுவனங்களின் இயக்குனர்கள் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது ”name and shame” என்ற ஒரு நடவடிக்கையின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட போலி நிறுவன இயக்குனர்களின் பெயர் பட்டியலை மத்திய பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகம் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளது. இதில் அரசியல் பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், குடிமைப் பணிகள் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் அதிகம் பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இடமாக சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சென்னையில் 24ஆயிரத்து 48 இயக்குனர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில் வி.கே.சசிகலா, கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சசிகலாவை இயக்குனராகக் கொண்டு, பேன்சி ஸ்டீல்ஸ் (Fancy Steels Private Limited), ரெயின்போ ஏர் (Rainbow Air Private Limited), சுக்ரா கிளப் (Sukraa Club Private Limited) மற்றும் இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் (Indo Doha Chemicals and Pharmaceuticals Limited) ஆகிய போலி நிறுவனங்கள் செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்களான இளவரசி, குலோத்துங்கன் ஆகியோர் இயக்குனர்களாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, பிரபல வணிகர் யூசுஃபலி (Yusufali) ஆகியோரது பெயர்களும் பட்டியலில் உள்ளன.

ShellCompanies,VK_Sasikala,OommenChandy,Ilavarasi

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன