பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான டெண்டர் ரத்து

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்பான டெண்டரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 2018 ம் ஆண்டு வேட்டி, சேலை நெய்வதற்கான நூல் கொள்முதல் செய்ய கடந்த ஜூன் 22 ம் தேதி டெண்டர் விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டது.

இந்திய அளவில் கோரப்பட்ட இந்த டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், கழிவுநீரை வெளியேற்றவில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன், சமர்ப்பிப்பு காலம் 15 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஸ்ரீவெங்கட்ராம் நூற்பாலை சார்பிலும், முருகானந்தம் என்பவர் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமியிடம், பிற மாநில நிறுவனங்களை டெண்டரில் பங்கேற்க விடாமல் செய்யவும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டரை ஒதுக்கும் வகையிலும் புதிய நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

டெண்டர் விதிகளின்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கவேண்டும், 50 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள டெண்டரை இந்திய வர்த்தகப் பத்திரிக்கையில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை உள்ள நிலையில் 450 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர் குறித்து அந்த பத்திரிக்கையில் அறிவிப்பு வெளியிடவில்லை எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட தாமதத்தை தவிர்க்கும் வகையிலேயே விண்ணப்ப சமர்ப்பிப்புக் காலம் 15 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, துரைசாமி, விதிகளை பின்பற்றாமல் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற டெண்டர் சட்டத்தின் கீழ் புதிய டெண்டர் கோர அரசுக்கு அனுமதியளித்தும் உத்தரவு பிறப்பித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன