பெரம்பூர் அருகே பூங்காவிற்குள் புகுந்து பொதுமக்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய ரவுடிகள்

சென்னை பெரம்பூரில், ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதுடன், போலீசாருக்கும் மிரட்டல் விடுத்து அட்டூழியத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பூர் முரசொலி மாறன் பாலம் அருகே உள்ள பூங்காவிற்குள், புதன் கிழமை இரவு புகுந்த ரவுடிகள் சிலர், அங்கிருந்தவர்களிடம் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டல் விடுத்துள்ளனர். பூங்கா அருகே உள்ள சாலை வழியாக சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த அரவிந்த் என்ற நபரை வழிமறித்து நிறுத்தித் தாக்கி, அவரிடமிருந்த செல்போனைப் பறித்துள்ளனர். தகவறிந்து அங்கு வந்த இரண்டு ரோந்து போலீசாரையும், ரவுடிக் கும்பல் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி உள்ளது. அந்த வழியாக வந்த கால் டாக்சியை ரவுடிக் கும்பல் கண்மூடித் தனமாக அடித்து நொறுக்கி உள்ளது. அதன் ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து செல்போன் உள்ளிட்ட பொருட்களை ரவுடிகள் பறித்துள்ளனர்.

அவர்களை பிடிப்பதற்காக சென்ற போலீசாருக்கும் ரவுடிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், அந்தக் கும்பலைச் சேர்ந்த அப்பு, மணவாளன் என்ற இரு ரவுடிகளைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் முரசொலி மாறன் பாலம் அருகே உள்ள பூங்கா, போதிய கண்காணிப்பின்மையின் காரணமாக சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ரவுடிகளின் அட்டூழியத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன