புதுச்சேரியில் கரும்பு விவசாயிகள் மீது போலீசார் தடியடி

புதுச்சேரியில், கூட்டுறவு சர்க்கரை ஆலையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ. மற்றும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு ஓராண்டாக வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ஏழரை கோடி ரூபாயை வழங்க வேண்டும, ஆலைப் பணியாளர்களுக்கு போனஸ், ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள சர்க்கரை ஆலை முன்பாக என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ செல்வம் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முழக்கமிட்டபடியே போராட்டக்குழுவினர் சர்க்கரை ஆலைக்குள் நுழைய முயன்றனர்.

போராட்டத்திற்கு அனுமதி தரப்படவில்லை எனக் கூறி போலீசார் அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாரின் எதிர்ப்பையும் மீறி போராட்டக் குழுவினர் உள்ளே செல்ல முயன்றனர். இதனால், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

போலீசார் நடத்திய தடியடியில், எம்எல்ஏ செல்வத்தின் சட்டை கிழிக்கப்பட்டதுடன், கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்னாள் தலைவர் ஞானசேகரன் உட்பட15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ செல்வம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

போராட்டக்குழுவினரைக் கைது செய்த போது பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

One Response to புதுச்சேரியில் கரும்பு விவசாயிகள் மீது போலீசார் தடியடி

  1. S.rpRamasamy சொல்கிறார்:

    தேர்ந்த எடுத்த அரசு இருக்கும்போது, அவர்களுக்குஎதிரான போராட்டம்தான் சரியானதாக இருக்கும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன