புதுச்சேரியில் கடந்த ஆண்டு MBBS சேர்ந்த 770 மாணவர்களின் சேர்க்கை ரத்து

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று கூறி புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட 770 மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை என்பது தெரியவந்திருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 7ஆம் தேதி புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலாளருக்கு அகில இந்திய மருத்துவக் கவுன்சில் கடிதம் எழுதி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அகில இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளை மீறி 770 மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்கப்பட்டிருப்பதாக சென்டாக் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய அந்தக் குழு, 770 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாக 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அகில இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் அறிக்கை அளித்தனர்.

அதன் அடிப்படையில், 770 மாணவர்களின் சேர்க்கையை அகில இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்துள்ளது. சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!